இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது.
இந்தியா-இலங்கை மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்; இன்று நடக்கிறது
Published on

இதன்படி இந்தியா-இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்திய அணி விளையாடும் கடைசி 20 ஓவர் தொடர் இது என்பதால் வீரர்களின் செயல்பாடு முக்கியத்துவம் பெறும். ஒரு நாள் தொடரில் முதல் 2 ஆட்டங்களில் கலக்கிய இந்திய அணி கடைசி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இதில் 5 புதுமுகங்களை பயன்படுத்தி பார்த்த இந்திய அணி பீல்டிங்கிலும் தடுமாறியது. எனவே இன்றைய ஆட்டத்தில் முழுமையான அணியாக இந்தியா களம்

இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி அறிமுக வீரராக இடம்பெறுவார் என்று தெரிகிறது.தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் களம் காணும். இவ்விரு அணிகளும் 20 ஓவர் கிரிக்கெட்டில் இதுவரை 19 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 13-ல் இந்தியாவும், 5-ல் இலங்கையும் வெற்றி கண்டன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: பிரித்வி ஷா, ஷிகர் தவான் (கேப்டன்), இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது கிருஷ்ணப்பா கவுதம், தீபக் சாஹர், புவனேஷ்வர்குமார், வருண் சக்ரவர்த்தி, யுஸ்வேந்திர சாஹல் அல்லது ராகுல் சாஹர்.

இலங்கை: அவிஷ்கா பெர்னாண்டோ, மினோட் பானுகா, ராஜபக்சே, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, ஷனகா (கேப்டன்), சமிகா கருணாரத்னே, ஹசரங்கா அல்லது ஜெயவிக்ரமா, உதனா, சமீரா, அகிலா தனஞ்ஜெயா.

இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி டென்4 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com