

3-வது டெஸ்டில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை அவர்களது இடத்திலேயே புரட்டியெடுத்ததன் மூலம் பல புதிய சாதனைகளையும் சொந்தமாக்கியது. அதன் விவரம் வருமாறு:
*ஆசிய கண்டத்துக்கு வெளியே இந்திய அணி இந்த ஆண்டில் 4 வெற்றிகளை பெற்று இருப்பது இதற்கு முன்பு நடந்திராத ஒன்றாகும். அதாவது தென்ஆப்பிரிக்கா (ஜோகனஸ்பர்க் டெஸ்டில் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி), இங்கிலாந்து (நாட்டிங்காம் டெஸ்டில் 203 ரன்கள் வித்தியாசத்தில்) மற்றும் தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் (அடிலெய்டு மற்றும் மெல்போர்னில்) இந்த வெற்றிகள் கிடைத்துள்ளன. இதற்கு முன்பு 1968ம் ஆண்டு நியூசிலாந்தில் 3 டெஸ்டில் வெற்றி பெற்றதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.
* விராட் கோலி டாஸ் ஜெயித்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றதாக வரலாறு கிடையாது. இதுவரை அவர் டாஸ் ஜெயித்த 21 டெஸ்டுகளில் இந்திய அணி 18ல் வெற்றியும், 3ல் டிராவும் கண்டுள்ளது. 8 வெளிநாட்டு போட்டி வெற்றிகளும் இதில் அடங்கும்.
* ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2 டெஸ்டுகளில் வெற்றி கண்டிருப்பது இது 2வது நிகழ்வாகும். 197778ம் ஆண்டு தொடரில் இந்தியா 2 டெஸ்டுகளில் வெற்றி பெற்றாலும் அந்த தொடரை 23 என்ற கணக்கில் இழந்தது குறிப்பிடத்தக்கது.
*இந்த ஆண்டில் நடந்துள்ள 48 டெஸ்டுகளில் 43ல் முடிவு கிடைத்திருக்கிறது. 5 போட்டி மட்டுமே டிரா ஆகியுள்ளது. குறைந்தது 10 டெஸ்டுகளாவது நடந்த ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் 2018ம் ஆண்டில் தான் டிரா எண்ணிக்கை (10.42 சதவீதம்) குறைவாக இருக்கிறது.
கபில்தேவ் சாதனையை முறியடித்தார், பும்ரா
*இந்திய வேகப்பந்து வீச்சாளர் 25 வயதான ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஜனவரி மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் அரங்கில் நுழைந்தார். இந்த ஆண்டில் அவர் 9 டெஸ்டில் விளையாடி 48 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரமாதப்படுத்தியுள்ளார். அறிமுக ஆண்டிலேயே அதிக விக்கெட்டுகள் அள்ளியவர்களின் பட்டியலில் அவர் 3வது இடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டெர்ரி ஆல்டர்மன் முதலிடத்திலும் (54 விக்கெட், 1981ம் ஆண்டு), வெஸ்ட் இண்டீசின் கர்ட்லி அம்ப்ரோஸ் (49 விக்கெட், 1988ம் ஆண்டு) முதல் இரு இடங்களில் உள்ளனர்.
*இரண்டு இன்னிங்சையும் சேர்த்து இந்த டெஸ்டில் பும்ரா மொத்தம் 86 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரின் மெச்சத்தகுந்த பந்து வீச்சாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு கபில்தேவ், 1985ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த டெஸ்டில் 109 ரன்களுக்கு 8 விக்கெட் எடுத்ததே சிறந்ததாக இருந்தது. அந்த 33 ஆண்டு கால சாதனையை பும்ரா முறியடித்தார்.
விக்கெட் கீப்பிங் ரிஷாப் பான்ட் கலக்கல்
*இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் இந்த தொடரில் இதுவரை 20 பேரை ஆட்டம் இழக்கச் செய்து இருக்கிறார். இதன் மூலம் ஒரு தொடரில் அதிகம் பேரை அவுட் செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். நரேன் தம்ஹானே (பாகிஸ்தானுக்கு எதிராக, 195455ம் ஆண்டு), சயத் கிர்மானி (பாகிஸ்தானுக்கு எதிராக, 197980) ஆகியோர் தலா 19 பேரை வெளியேற்றியதே இந்திய விக்கெட் கீப்பர்களின் முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.
*21 வயதான ரிஷாப் பான்டும் இந்த ஆண்டில் தான் டெஸ்டில் அடியெடுத்து வைத்தார். விக்கெட் கீப்பிங் பணியில் அவர் 8 டெஸ்டில் 40 கேட்ச் மற்றும் 2 ஸ்டம்பிங் செய்துள்ளார். அறிமுக ஆண்டிலேயே நிறைய பேரை அவுட் செய்து வெளியேற்றிய விக்கெட் கீப்பர்களில் ஆஸ்திரேலியாவின் பிராட் ஹேடினின் (2008ம் ஆண்டில் 42 பேரை அவுட் செய்திருந்தார்) சாதனையை சமன் செய்தார்.