இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி 231 ரன்னில் ‘ஆல்-அவுட்’

இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) பிரிஸ்டலில் நடந்து வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய பெண்கள் அணி 231 ரன்னில் ‘ஆல்-அவுட்’
Published on

இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. மேலும் 60 ரன்கள் எடுத்தால் (247 ரன்கள்) பாலோ-ஆன் ஆபத்தை தவிர்க்கலாம் என்ற நிலையில் தொடர்ந்து ஆடிய இந்திய அணி மதிய உணவு இடைவேளைக்கு முன்பு 81.2 ஓவர்களில் 231 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. இதனால் 165 ரன்கள் பின்தங்கிய இந்தியா தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடியது. ஸ்மிர்தி மந்தனா 8 ரன்னில் கேட்ச் ஆகி ஏமாற்றம் அளித்தார்.

அடுத்து தீப்தி ஷர்மா, ஷபாலி வர்மாவுடன் இணைந்தார். இந்திய அணி 24.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் போட்டி பாதிக்கப்பட்டது. அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ஷபாலி வர்மா (55 ரன், 68 பந்து, 11 பவுண்டரி), தீப்தி ஷர்மா (18 ரன்) களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்சில் 96 ரன்கள் விளாசிய 17 வயதான ஷபாலி வர்மா அறிமுக டெஸ்டிலேயே இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். டிராவுக்காக போராடும் இந்திய அணி இன்று 4-வது மற்றும் கடைசி நாளில் விளையாடும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com