தொடரை வென்ற இந்தியா.. கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன..?

image courtesy: twitter/@ICC
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
ஆமதாபாத்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடியது. இதில் நடைபெற்ற முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் (4-வது போட்டி ரத்து) முன்னிலையில் இருந்தது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 73 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்களும் அடித்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் குயிண்டன் டி காக் 65 ரன்கள் அடித்தார். இந்திய தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட் வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக ஹர்திக் பாண்ட்யாவும், தொடர்நாயகனாக வருண் சக்ரவர்த்தியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தென் ஆப்பிரிகாவுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் அளித்த பேட்டியில், “இந்த தொடரின் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் விளையாடும் கிரிக்கெட்டின் குறிப்பிட்ட பிராண்டில் நிற்க விரும்பினோம். அதை இப்போட்டியில் கச்சிதமாக செய்தோம். எதையும் அதிகமாக முயற்சிக்கவில்லை. அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட விரும்பிய எங்கள் வீரர்கள் அனைவருக்கும் நல்ல முடிவுகள் கிடைத்துள்ளன.
ஆமாம், கடந்த சில தொடர்களில் இதைத்தான் காணவில்லை என்று நாங்கள் உணர்ந்தோம். இப்படித்தான் நாங்கள் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். ஒருவர் அதிரடியாக தொடங்கி விட்டால் நிற்கக்கூடாது. இடைவிடாமல் அடிக்கும் நோக்கத்துடன் நாங்கள் விளையாடியது அழகாக வேலை செய்தது.
நாங்கள் வித்தியாசமாக ஏதாவது முயற்சிக்க விரும்பினோம். பவர்பிளேயில் ஒரு ஓவரில் பும்ராவை பயன்படுத்தி விட்டு பின்னர் அவரை டெத் ஓவர்களுக்குத் தயார்படுத்துவதுதான் எங்களது திட்டம். வாஷி இன்று (நேற்று) பொறுப்பேற்றார். சில நேரங்களில் நாங்கள் அழுத்தத்தில் இருந்தோம். ஆனால் இந்த விளையாட்டு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கிறீர்கள் என்பது பற்றியது. வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால் இது ஒரு நல்ல தொடர். நாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்தோம்.
நாங்கள் தவறவிட்ட ஒரே விஷயம் "சூர்யகுமார்’ எனும் பேட்ஸ்மேனை கண்டறியாததாக இருக்கலாம். அவர் எங்கேயோ காணாமல் போய்விட்டார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் மீண்டும் வலுவாக கம்பேக் கொடுப்பார். ஒரு கேப்டனாக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நாங்கள் சிக்கலில் சிக்கிய போதெல்லாம், யாரோ ஒருவர் கையை உயர்த்தி எங்களை மீட்டெடுப்பார்கள். ஒரு கேப்டனாக, அது மிகவும் திருப்தி அளிக்கிறது” என்று கூறினார்.






