

லண்டன்,
இங்கிலாந்தில் நடந்து வரும், மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான கட்டத்தை அடைந்துள்ளது. பி பிரிவில் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரமஎதிரியான பாகிஸ்தானை 124 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது. 2வது ஆட்டத்தில் இலங்கையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மண்ணை கவ்வியது.
இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் முன்னாள் சாம்பியன் தென்ஆப்பிரிக்காவுடன் இன்று லண்டனில் மோதுகிறது.
தென்ஆப்பிரிக்க அணியும், இந்தியாவை போன்றே ஒரு வெற்றி (இலங்கைக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (பாகிஸ்தானுக்கு எதிராக) 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரைஇறுதிக்குள் நுழையும். தோற்கும் அணி வெளியேற்றப்படும்.
போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணியாக வர்ணிக்கப்பட்ட இந்திய அணி, முந்தைய ஆட்டத்தில் இலங்கையுடன் 321 ரன்கள் குவித்தும் பந்து வீச்சில் சொதப்பியதால் சோடை போனது. நம்பர் ஒன் அணியான தென்ஆப்பிரிக்கா பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் பலம் வாய்ந்தது. அவர்களை பணிய வைக்க வேண்டும் என்றால், இந்தியா தனது உச்சபட்ட திறமையை வெளிக்காட்ட வேண்டியது அவசியம். பொதுவாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் சுழற்பந்து வீச்சில் கொஞ்சம் பலவீனமானவர்கள். அதனால் முதல் இரு ஆட்டங்களில் இடம்பெறாத சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்து மண்ணில் அஸ்வின் 14 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். உமேஷ் யாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.