இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பரத் அருண், ஸ்ரீதர் கொரோனாவால் பாதிப்பு

ரவிசாஸ்திரியை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பரத் அருண், ஸ்ரீதர் கொரோனாவால் பாதிப்பு.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் பரத் அருண், ஸ்ரீதர் கொரோனாவால் பாதிப்பு
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் நடந்தது. இந்த போட்டியின் போது கடந்த சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர், பிசியோதெரபிஸ்ட் நிதின் பட்டேல் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட பரிசோதனையில் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் ரவிசாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகியோர் லண்டனில் தொடர்ந்து 10 நாட்கள் தனிமைப்படுத்துதலை கடைப்பிடிக்க வேண்டும். அதன்பிறகு பரிசோதனையில் இரண்டு முறை கொரோனா இல்லை என்பதை குறிக்கும் நெகட்டிவ் முடிவு வந்த பிறகு தான் இந்திய அணியினருடன் இணைய முடியும். எனவே அவர்கள் மான்செஸ்டரில் (செப்.10-14) நடைபெறும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள முடியாது. பயிற்சியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து இந்திய அணி வீரர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. அதன் முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com