ஸ்டிங் ஆபரேஷனில் உளறல் பிசிசிஐ கோபம்...! யார் இந்த சேத்தன் சர்மா...?

அணியில் சேருவதற்காக ஊசி போடும் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டிங் ஆபரேஷனில் உளறல் பிசிசிஐ கோபம்...! யார் இந்த சேத்தன் சர்மா...?
Published on

புதுடெல்லி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக் குழுவின் தலைவர் சேத்தன் சர்மாவை தனியார் டிவி ஒன்றுஉளவு கேமராவால் ரகசியமாக சேத்தன் சர்மா கூறியவற்றை படம் பிடித்தது

அதில் இந்திய அணியில் போலி பிட்னஸ் ஊசி பயன்படுத்தப்பட்டது, சவுரவ் கங்குலி மற்றும் விராட் கோலி இடையேயான கருத்து வேறுபாட்டிற்கான உண்மையான காரணம் மற்றும் அணியில் இருந்து வீரர்களை நீக்கியதற்கு யார் காரணம் என்பது உள்ளிட்டமறைக்கப்பட்ட உண்மைகளை சர்மா வெளிப்படுத்தி உள்ளார்.

சேத்தன் சர்மாவிடம் நடத்தப்பட்ட ஸ்டிங் ஆப்ரேஷன் பிசிசிஐ அமைப்பை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. பிசிசிஐ அமைப்பு இதனால் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஸ்டிங் ஆபரேஷன் தொடர்பாக ரோஜர் பின்னி மற்றும் ஜெ ஷா இருவருக்கும் தகவல்கள் சென்றுள்ளன. இரண்டு பேருமே இந்த வீடியோக்களை பார்த்து சேத்தன் சர்மா மீது கடும் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை தோல்விக்கு பின் சேத்தன் சர்மா நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் சேர்க்கப்பட்ட அவர் தற்போது மீண்டும் நீக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அதே சமயம் அணியில் சேர்வதற்காக ஊசி போடும் வீரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

தனது 16வது வயதில் அரியானா மாநிலத்திற்காக கிரிக்கெட் ஆட தொடங்கிய சேத்தன் சர்மா 23 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 65 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் ஆகியவற்றில் வேக பந்து வீச்சாளராக விளையாடியுள்ளார். குறிப்பாக 1987 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை அவர் எடுத்தது அவரது கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமாகும்.

பல்வேறு ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை குவித்து இந்திய அணிக்கு வலு சேர்த்ததில் முக்கியமான நபர் சேத்தன் சர்மா. அதே போல், 1986ம் ஆண்டில் ஆஸ்டரல் ஆசியா கோப்பை போட்டியில் அவர் வீசிய கடைசி பந்தால் இந்தியா தோல்வியை தழுவியதும் அவரின் கிரிக்கெட் வாழ்கையில் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பிறகு, 1996ம் ஆண்டு இவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சேத்தன் கிரிக்கெட் வர்ணனையாளராக தனது பணியை துவங்கினார். பிறகு 2009ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அதற்கு பின்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து தேசிய விளையாட்டு அமைப்பின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். பின்னர், 2020ம் ஆண்டு உலக அளவில் கிரிக்கெட்டில் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பான பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடர்ந்த அவர் 2022ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதை தொடர்ந்து அந்த குழு கலைக்கபட்டது. இந்த நிலையில் மீண்டும் ஜனவரி மாதம் அதே தலைவர் பதவிக்கு அவரை பரிந்துரைத்து தலைவராக ஆக்கியது கிரிக்கெட் வாரியம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தற்போது வைரல் சர்ச்சையில் மாட்டியிருக்கிறார் சேத்தன் சர்மா. ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் பல்வேறு முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வாரியம் குறித்து உளறி கொட்டியிருக்கிறார் சேத்தன் சர்மா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com