

சென்னை,
2026 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் நிறைவடையும் நிலைக்கு வந்துள்ளதால், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த பிளே ஆப் (Playoffs) மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ரசிகர்களின் வசதிக்காக இந்த முறை டிக்கெட் விற்பனை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்பட உள்ளது.
1. குவாலிபயர் 1 மற்றும் எலிமினேட்டர் போட்டிகள்:
மே 20-ம் தேதி (நாளை) இரவு 7:00 மணி முதல் ரூபே கிரெடிட் கார்டு (RuPay Credit Card) வைத்துள்ளவர்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம்.
மே 21-ம் தேதி (நாளை மறுநாள்) இரவு 8:00 மணி முதல் அனைத்து ரசிகர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2. குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி:
மே 22-ம் தேதி இரவு 7:00 மணி முதல் ரூபே கிரெடிட் கார்டு (RuPay Credit Card) வைத்துள்ளவர்களுக்கு முன்பதிவு தொடங்குகிறது.
மே 23-ம் தேதி இரவு 8:00 மணி முதல் அனைத்து ரசிகர்களும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ரசிகர்கள் தங்களது பிளே ஆப் போட்டிக்கான டிக்கெட்டுகளை ஐபிஎல் அதிகாரபூர்வ இணையதளங்கள் மூலமாக மட்டுமே பாதுகாப்பாகப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளே ஆப் சுற்று போட்டிகள் மூன்று வெவ்வேறு நகரங்களில் உள்ள மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
குவாலிபயர் 1 (மே 26): தர்மசாலா மைதானம் (இமாச்சலப் பிரதேசம்)
எலிமினேட்டர் (மே 27): முல்லன்பூர் மைதானம் (நியூ சண்டிகர்)
குவாலிபயர் 2 (மே 29): முல்லன்பூர் மைதானம் (நியூ சண்டிகர்)
இறுதிப்போட்டி (மே 31): உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி மைதானம்(குஜராத்)
லீக் சுற்றுகளின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் இந்த பிளே ஆப் சுற்றில் மோதுகின்றன. இந்த ஆண்டின் ஐபிஎல் மகுடத்தை சூடப்போகும் அந்த சாம்பியன் யார் என்பதைக் காண ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் தற்போது ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறது.