

சென்னை,
2026 ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான ரேஸ் தற்போது உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது. நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்புத் தொடரின் டாப் 4 இடங்களுக்குள் 3 அணிகள் தங்களது பிளே ஆப் வாய்ப்பை அதிகாரபூர்வமாக உறுதி செய்துள்ளன.
மீதமுள்ள ஒரே ஒரு பிளே ஆப் இடத்தை பிடிக்க 5 அணிகள் மோதுகின்றன. இதனால், வரவிருக்கும் லீக் போட்டிகள் அனைத்தும் வாழ்வா-சாவா ஆட்டங்களாக மாறியுள்ளன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் சொகுசாக அமர்ந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 16 புள்ளிகளுடன் பிளே ஆப்-க்குள் நுழைந்தது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் தனது பிளே ஆப் இடத்தை லாக் செய்துள்ளது.
இந்த 3 அணிகள் ஏற்கனவே பிளே ஆப்-க்குள் நுழைந்துள்ளநிலையில் மீதி இருக்கும் ஒரே ஒரு இடத்திற்கு 5 அணிகள் போட்டி இடுகின்றன.
13 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணிக்கு இன்னும் ஒரே ஒரு லீக் போட்டி மட்டுமே மீதமுள்ளது. 12 புள்ளிகளுடன் உள்ள ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளன. இதனால் 16 புள்ளிகள் வரை பெற வாய்ப்புள்ளதால், மற்ற அணிகளை விட கூடுதல் சாதகமான நிலையில் உள்ளனர்.
12 புள்ளிகளுடன் உள்ள சென்னை அணிக்கு இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது. 12 புள்ளிகளுடன் உள்ள டெல்லி அணிக்கும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ளது.
11 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணிக்கு 2 போட்டிகள் மீதமுள்ளன. இவர்கள் தங்களின் அடுத்த இரு போட்டிகளிலும் வென்றாலும் அதிகபட்சமாக 15 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.
பஞ்சாப் , சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகளுக்கு அடுத்த போட்டி "டூ ஆர் டை" ஆட்டமாகும். அதில் வெற்றி பெற்றாலும், மற்ற போட்டிகளின் முடிவுகள் சாதகமாக அமைய வேண்டும். இவர்களில் அந்த 4-வது இடத்தை தட்டிப் பறிக்கப் போவது யார்? என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.