இந்திய அணியில் 6 முதல் 7 பந்துவீச்சாளர்கள் தேவை - இங்கிலாந்து முன்னாள் வீரர்

இந்திய அணியில் 6 முதல் 7 பந்துவீச்சாளர்கள் இருக்க வேண்டும் என இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP 
Image Courtesy: AFP 
Published on

ஆக்லாந்து,

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க்கில் நேற்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியில் கேப்டன் தவான், சுப்மன் கில், ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரின் அரைசதத்துடன் 306 ரன்கள் குவித்தது.

307 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பின் ஆலன் 22 ரன்களும், டிவோன் கான்வே 24 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். டேரில் மிட்சேல் 11 ரன்னுக்கு அவுட்டானார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை சீரான வேகத்தில் ரன்களை உயர்த்தியது. தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய லாதம், அரைசதம் கடந்தபின் அதிரடி காட்டினார். அவர் 104 பந்துகளில் 19 பவுண்டரி, 5 சிக்சருடன் 145 ரன்கள் குவித்தார். அவருக்கு பக்கபலமாக நின்று விளையாடிய வில்லியம்சன் 94 ரன்கள் குவித்தார்.

இருவரையும் ஆட்டமிழக்க இந்திய பந்துவீச்சாளர்கள் பயன்படுத்திய வியூகங்கள் கடைசி வரையில் பலனளிக்கவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 47.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து இலக்கை கடந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப்போட்டிக்கு பின்னர் இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டர்ன் பதிவில்,

நியூசிலாந்து அணி அருமையாக விளையாடியது. 300 ரன்களை 270 போல் காண்பித்தீர்கள். வில்லியம்சன் எப்போதும் போல் அருமையாக ஆடினார். ஆனால், தொடக்க ஆட்டக்காரரான லதாமை கீழ்வரிசையில் ஆட வைத்து அதில் வெற்றி கண்டுள்ளனர். இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுடன் சென்று தவறு செய்து விட்டது.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

இதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தனது கருத்தை கூறியுள்ளார். அவர், நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்தில் உள்ளனர். நீங்கள் குறைந்தது 6 அல்லது 7 பந்து வீச்சாளர்களை வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com