ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது - கங்குலி தகவல்

இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்டில் விளையாட இருப்பதாக கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி பகல்-இரவு டெஸ்டில் விளையாடுகிறது - கங்குலி தகவல்
Published on

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தயக்கம் காட்டியது. மின்னொளியின் கீழ், மிளிரும் இளஞ்சிவப்பு நிற பந்தில் (பிங்க் பந்து) தங்களுக்கு போதிய அனுபவம் இல்லை என்று காரணம் கூறி பின்வாங்கியது. கடந்த 2018-19-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சென்று விளையாடிய போது அடிலெய்டு டெஸ்டை பகல்-இரவாக விளையாட நமது வீரர்கள் மறுத்தனர்.

இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும் இந்தியாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அவர் இந்திய கேப்டன் விராட் கோலியிடம் பேசி பகல்-இரவு டெஸ்டில் பங்கேற்க சம்மதிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் இந்திய அணி முதல்முறையாக பகல்-இரவு டெஸ்டில் கால்பதித்தது. கொல்கத்தா ஈடன் கார்டனில் வங்காளதேசத்துக்கு எதிராக அரங்கேறிய இந்த டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 48 ரன்கள் வித்தியாசத்தில் அதுவும் 3-வது நாளிலேயே வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்திய அணி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த ஆண்டு இறுதியில் (டிசம்பர் மாதம்) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் ஒரு டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நேற்று தெரிவித்தார். இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்டில் விளையாடுவது உறுதி. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், ஒவ்வொரு தொடரிலும் குறைந்தது ஒரு டெஸ்டை மின்னொளியின் கீழ் நடத்த கிரிக்கெட் வாரியம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே விராட் கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் பகல்-இரவு டெஸ்ட் சவாலுக்கு நாங்கள் தயார். அது பிரிஸ்பேன் அல்லது பெர்த் எதுவாக இருந்தாலும் அது பற்றி கவலையில்லை. பகல்-இரவு டெஸ்ட் ஒவ்வொரு தொடரிலும் பரவசமூட்டும் போட்டியாக உருவெடுத்துள்ளது. எனவே பகல்-இரவு டெஸ்டை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஆடும் பகல்-இரவு டெஸ்ட், அடிலெய்டு அல்லது பெர்த் ஆகிய இடங்களில் ஒன்றில் நடத்தப்பட வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 7 பிங்க் பந்து டெஸ்டில் விளையாடியுள்ளது. அதில் ஒன்றில் கூட தோற்றதில்லை என்பது நினைவு கூரத்தக்கது.

மேலும், அடுத்த ஆண்டு (2021) ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் போது அதில் ஒன்றை பகல்-இரவு போட்டியாக நடத்துவதும் என்றும் டெல்லியில் நேற்று சவுரவ் கங்குலி தலைமையில் நடந்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தின் மொடேராவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடத்தப்படும் என்று தெரிகிறது.

விரைவில் திறக்கப்பட உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியம் ஆகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com