உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் - மந்தனா

20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பிரிமீயர் லீக் உதவிகரமாக இருந்ததாக ஸ்மிர்தி மந்தனா கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம் - மந்தனா
Published on

அடிலெய்டு,

அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் 2-1 என்ற கணக்கில் சொந்தமாக்கியது. இந்திய தொடக்க ஆட்டக்காரரும், துணை கேப்டனுமான ஸ்மிர்தி மந்தனா 82 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டநாயகி விருதை பெற்றார்.

அவர் அளித்த ஒரு பேட்டியில், “இந்திய அணி தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். எதிரணி யார் என்பது குறித்தோ அல்லது கடந்த காலங்களில் என்ன நடந்தது என்பது குறித்தோ சிந்திக்கவில்லை. அதனால் தான் எங்களால் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து தொடரை கைப்பற்ற முடிந்தது.

இப்போது இந்திய பெண்கள் அணி கிட்டத்தட்ட மாற்றத்திற்கான காலக்கட்டத்தில் உள்ளது. நிறைய இளம் நட்சத்திரங்கள் வருகிறார்கள். இந்த காலக்கட்டத்தில் உலக கிரிக்கெட் அரங்கில் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறோம். யாரை வீழ்த்துகிறோம், எங்கு ஜெயிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்ப டுத்தி முதன்மையான அணியாக இருக்க வேண்டும். 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பெண்கள் பிரிமீயர் லீக் உதவிகரமாக இருக்கிறது” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com