

புதுடெல்லி,
டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆப்கானிஸ்தா னுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 7 விக்கெட்டுக்கு 221 ரன்கள் குவித்தது. அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் சதம் நொறுக்கி சாதனை படைத்தார். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் 14.1 ஓவர்களில் 94 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 127 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக சொந்தமாக்கியது. பின்னர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறி யதாவது:-
என்னை பொறுத்தவரை இந்த ஆட்டத்தில் 'பவர்-பிளே'யில (முதல் 6 ஓவர்) 100 ரன்கள் திரட்டியது மிகப்பெரிய சாதக மான விஷயமாகும். எனது பயிற்சி காலத்தில் பவர்-பிளேயில் இவ்வளவு வேகமாக ரன் எடுத்ததில்லை. எனவே நீங்கள் அதிரடியாக விளையாடத் தொடங்கினால், தொடர்ந்து அப்படியே செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான செய்தியாக அது அமைந்தது. எதிர்காலத்திலும் இது தொடர வேண்டும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் நாங்கள் இன்னும் 300 ரன்களை (வங்காளதேசத்துக்கு எதிராக 297 ரன் எடுத்ததே இந்தியாவின் அதிகபட்சமாகும்) தொட்டதில்லை. அனேகமாக அது தான் எங்களது அடுத்த இலக்காக இருக்கும்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.