100வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தியாவின் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரர்

இந்தியாவில் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரரான வசந்த் ராய்ஜி இன்று தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
100வது பிறந்த நாளை கொண்டாடிய இந்தியாவின் வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரர்
Published on

புதுடெல்லி,

முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் வாய்ந்தவர் வசந்த் ராய்ஜி. இவருக்கு இன்று 100வது பிறந்த நாளாகும்.

இந்தியாவின் மிக வயது முதிர்ந்த கிரிக்கெட் வீரராக அறியப்படும் இவர் கடந்த 1920ம் ஆண்டு ஜனவரி 26ந்தேதி பிறந்துள்ளார். இவருக்கு முன் இந்த பெருமையை பெற்றிருந்தவர் பி.கே. கருடாச்சார். கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 26ல் கருடாச்சார் மறைவுக்கு பின் ராய்ஜி இந்தியாவின் வயது முதிர்ந்த முதல் தர கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றார். தெற்கு மும்பையில் உள்ள வால்கேஷ்வர் என்ற பகுதியில் அவர் வசித்து வருகிறார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் தெண்டுல்கர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டிற்கு நேரில் சென்று கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

இதுபற்றி சச்சின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவொன்றில், ஒரு சிறந்த சதம்! வசந்த் ராய்ஜிக்கு மிக சிறந்த 100வது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். கடந்த காலங்களில் நடந்த ஆச்சரியமிக்க கிரிக்கெட் கதைகள் சிலவற்றை பற்றி அறிந்து கொண்ட அருமையான தருணம் வாக் மற்றும் எனக்கு கிடைத்தது. எங்களது இனிமையான விளையாட்டை பற்றிய பொக்கிஷம் நிறைந்த நினைவுகளை அளித்தமைக்காக உங்களுக்கு நன்றி என தெரிவித்து உள்ளார்.

ராய்ஜி வலதுகை பேட்ஸ்மேன் ஆவார். அவர் 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 277 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 23.08 ரன்கள் வைத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 68 ரன்கள். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் தனது குடும்ப தொழிலான சார்ட்டர்டு அக்கவுண்டன்சி பணியில் தன்னை இணைத்து கொண்டார்.

அதன்பின்பும் கிரிக்கெட் மீது இருந்த விருப்பம் அவருக்கு குறையவில்லை. அதனால் விக்டர் டிரம்பர், சி.கே. நாயுடு, எல்.பி. ஜெய் ஆகிய கிரிக்கெட் வீரர்களை பற்றிய புத்தகங்களை அவர் எழுதியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் சதம் அடிக்காத அவர் தனது வாழ்நாளில் சதம் பூர்த்தி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com