சர்வதேச டி20 கிரிக்கெட்: ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்த லிட்டன் தாஸ்

Image tweeted by ICC
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொட ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேச அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
இந்நிலையில், சூப்பர் 4 சுற்று நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இலங்கை- வங்காளதேச அணிகள் நேற்று மோதின. இந்த போட்டிக்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை தரப்பில் அதிகபட்சமாக தசுன் ஷனகா 64 ரன்கள் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடர்ந்து 169 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் கண்ட வங்காளதேச அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் தரப்பில் அதிகபட்சமாக சைப் ஹாசன் 61 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்கா, தசுன் ஷனகா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வங்காளதேச கேப்டன் லிட்டன் தாஸ் 23 ரன் எடுத்தார். இதன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவரது ரன் எண்ணிக்கை 2557 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வங்காளதேச அணிக்காக அதிக ரன் அடித்த வீரர் என்ற சாதனையை லிட்டன் தாஸ் படைத்துள்ளார். இந்தப்பட்டியலில் ஷகிப் அல் ஹசன் (2551 ரன்) 2ம் இடத்தில் உள்ளார்.






