சர்வதேச டி20 கிரிக்கெட்: புதிய சாதனை படைக்க உள்ள லிட்டன் தாஸ்

Image Courtesy: @ICC
சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
துபாய்,
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வங்காளதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை வீழ்த்தியது. சிறப்பாக விளையாடி 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்த கேப்டன் லிட்டன் தாஸ் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
நேற்றையப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், வங்காளதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை லிட்டன் தாஸ் படைத்தார். சர்வதேச டி20 போட்டிகளில் 2444 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்திலிருந்த மஹ்மதுல்லாவை பின்னுக்குத் தள்ளி, லிட்டன் தாஸ் இரண்டாமிடம் பிடித்தார்.
இந்நிலையில், சர்வதேச டி20 போட்டிகளில் வங்கதேச அணியின் கேப்டன் லிட்டன் தாஸ் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.வங்காளதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 2551 ரன்களுடன் ஷகிப் அல் ஹசன் முதலிடத்தில் இருக்கிறார்.
2496 ரன்களுடன் லிட்டன் தாஸ் இரண்டாவது இடத்தில் உள்ளார். வங்காளதேச அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக மாறி சாதனை படைக்க லிட்டன் தாஸுக்கு இன்னும் 56 ரன்கள் மட்டுமே தேவைப்படுவது குறிப்பிடத்தக்கது.






