ஐ.பி.எல். 2020: சாம் கரனின் அரைசதத்துடன் சென்னை அணி 114 ரன்கள் குவிப்பு

மும்பைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 114 ரன்கள் எடுத்துள்ளது.
ஐ.பி.எல். 2020: சாம் கரனின் அரைசதத்துடன் சென்னை அணி 114 ரன்கள் குவிப்பு
Published on

அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 41வது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். காயம் காரணமாக பிராவோ விலகியுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆட்டம் சென்னைக்கு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் ஓவரிலேய அந்த எதிர்பார்ப்பு தகர்ந்தது. ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட்(0 ரன்) எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆனார்.

பும்ரா வீசிய 2வது ஓவரில் நாராயணன் ஜெகதீசன்(0 ரன்), அம்பத்தி ராயுடு(2 ரன்கள்) இருவரும் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தனர். டுப்ளீசிஸ்(1 ரன்) 3வது ஓவரில் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். இதனால் சென்னை அணி 3 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய ஜடேஜா(7 ரன்கள்) ட்ரெண்ட் பவுல்ட் வீசிய 6வது ஓவரில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

கேப்டன் டோனி 2 பவுண்டரிகள், 1 சிக்ஸர் விளாசி சற்று நம்பிக்கையை ஏற்படுத்தினார். ஆனால் 7வது ஓவரில் ராகுல் சாஹர் வீசிய பந்தில் கேட்ச் ஆகி 16 ரன்களுடன் நடையை கட்டினார். மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இன்றைய ஆட்டத்தில், சென்னை அணியின் முதல் வரிசை வீரர்கள், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் மிகவும் பரிதாபமான நிலையில் சென்னை அணி திண்டாடியது.

இதற்கடுத்து களமிறங்கிய சாம் கரன் நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டார். மறுமுனையில் தீபக் சாஹர்(0 ரன்) ஷர்துல் தாக்கூர்(11 ரன்கள்) அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், சாம் கரன் நிலைத்து நின்று ஆடி அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சென்னை அணியின் ஸ்கோர் 100 ரன்களை தாண்டியது.

இந்த தொடரில் முதல் முறையாக களமிறங்கிய இம்ரான் தாஹிர் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ட்ரெண்ட் பவுல்ட் வீசிய 20வது ஓவரின் கடைசி பந்தில் சாம் கரன்(47 பந்துகள் 52 ரன்கள்) பவுல்ட் ஆனார். இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 114 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து மும்பை அணி 115 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com