ஐ.பி.எல். 2024; பாண்ட்யா இல்லை என்றாலும் குஜராத் அணி முழு பலமாகதான் உள்ளது - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்

ஹர்திக் பாண்ட்யாவின் இடத்தை நிரப்பும் அளவிற்கு குஜராத் அணி சிறப்பாகவே உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

மும்பை,

இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதன் 17-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தொடரில் 10 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

இதுவரை நடந்து முடிந்துள்ள ஐ.பி.எல் தொடர்களில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வரும் 22ம் தேதி ஆரம்பமாகிறது. முதல் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் இந்த போட்டியானது இரவு 8 மணிக்கு நடைபெற உள்ளது.

முன்னதாக 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்ட்யாவை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. அதற்கு ஏற்கனவே ஏராளமான மும்பை ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இதற்கு காரணமாக வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்திக் பாண்ட்யாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் பாண்ட்யா இல்லாதது குஜராத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பாண்ட்யா குஜராத் அணியிலிருந்து வெளியேறியது எந்த விதத்திலும் அந்த அணியை பாதிக்காது என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பாண்ட்யாவின் இழப்பு பெரிய இழப்பெல்லாம் ஒன்றுமில்லை. அவர் ஒரு தரமான ஆல்-ரவுண்டர் என்பது சரிதான். ஆனால் அவரது இடத்தை நிரப்பும் அளவிற்கு குஜராத் அணி சிறப்பாகவே உள்ளது. அந்த அணியில் நல்ல பந்துவீச்சு உள்ளது. அதோடு பாண்ட்யா குஜராத் அணியில் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்து வந்தார்.

ஆனால் தற்போதைய குஜராத் அணியில் அந்த இடத்திற்கு நிறைய மாற்று வீரர்கள் உள்ளனர். எனவே என்னை பொறுத்தவரை குஜராத் அணி பாண்ட்யா இல்லை என்றாலும் முழு பலமாகதான் உள்ளது என்று கூறுவேன்.

அதேபோன்று மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை பாண்ட்யா பின் வரிசையில் களமிறங்கி விளையாடும் வீரராகதான் இருப்பார். அதோடு பந்துவீச்சிலும் அவர் கை கொடுப்பார் என்பதனால் மும்பை அணிக்கு அது ஒரு சாதகமான விசயம்தான். பாண்ட்யாவிற்கு பின் வரிசையில் களமிறங்கி விளையாடுவதுதான் சரியாகப் பொருந்தும். இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com