ஐ.பி.எல்.இறுதிப்போட்டி: பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் அடித்தார்.
அகமதாபாத்,
10 அணிகள் பங்கேற்றிருந்த 18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி - பில் சால்ட் களமிறங்கினர். நடப்பு தொடரில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து வந்த இந்த ஜோடி இறுதிப்போட்டியில் சொதப்பியது. பில் சால்ட் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த மயங்க் அகர்வால் தனது பங்குக்கு 24 ரன்கள் அடித்த நிலையில் சாஹல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் விராட் கோலியுடன் கை கோர்த்த கேப்டன் ரஜத் படிதார் 16 பந்துகளில் 2 சிக்சர்கள் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். அடுத்து லிவிங்ஸ்டன் களமிறங்கினார்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் விராட் கோலி நிதானமாக ஆடி வந்தார். அவருடன் கை கோர்த்த லிவிங்ஸ்டனும் நிதானமாக விளையாட பெங்களூரு அணியின் ரன்வேகம் மந்தமாகவே நகர்ந்தது. நிதானமாக ஆடி வந்த விராட் கோலி 43 ரன்களில் ஓமர்சாயின் ஸ்லோ பவுன்சரில் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா அடித்து ஆட பெங்களூரு அணியின் ரன்வேகம் நிமிர்ந்தது. அவருடன் இணைந்து லிவிங்ஸ்டனும் அதிரடியில் இறங்கினார். இருப்பினும் அதிரடியை தொடர முடியவில்லை. லிவிங்ஸ்டன் 25 ரன்களிலும் (15 பந்துகள்), ஜிதேஷ் சர்மா 24 ரன்களிலும் (10 பந்துகள்) அவுட்டாகினர்.
இறுதி கட்டத்தில் ஷெப்பர்டு சிறிது அதிரடி காட்ட (9 பந்துகளில் 17 ரன்கள்) பெங்களூரு 190 ரன்களை தொட்டது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் அடித்துள்ளது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக கைல் ஜேமிசன் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். கடைசி ஓவரில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வெறும் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இதனையடுத்து 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி பஞ்சாப் களமிறங்க உள்ளது.






