ஐ.பி.எல். 2025: அது நடந்தால் மட்டுமே எம்.எஸ்.தோனி விளையாடுவார்... வெளியான தகவல்

2025 ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். தோனி விளையாடுவாரா? என்பது சந்தேகமாக பார்க்கப்படுகிறது.
image courtesy:AFP
image courtesy:AFP
Published on

புதுடெல்லி,

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல். தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐ.பி.எல். தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் விளையாடி லீக் சுற்றுடன் வெளியேறியது.

ஐ.பி.எல். தொடரின் முதல் சீசனிலிருந்தே சென்னை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த தோனி 5 கோப்பைகளையும் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ளார். அதனால் வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ள அவர் தற்போது 42 வயதை கடந்துள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்த அவர் சாதாரண விக்கெட் கீப்பராக விளையாடினார். அத்துடன் கடந்த சில வருடங்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு அவர் பேட்டிங்கில் கடைசி சில ஓவர்களில் மட்டுமே களமிறங்கினார். அதனால் இந்த வருடத்துடன் தோனி ஓய்வு பெற்றதாகவே பெரும்பாலான ரசிகர்கள் கருதுகின்றனர்.

இருப்பினும் 2025 சீசனில் தோனி விளையாடி சென்னை மண்ணில் ஓய்வு பெறுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனுக்காக மெகா ஏலம் நடைபெற உள்ளதால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட உள்ளன. பிசிசிஐ தரப்பில் ஐபிஎல் அணிகள் மெகா ஏலத்திற்கு முன்பாக 5 இந்திய வீரர்களை தக்க வைக்க ஒப்புதல் கொடுத்தால், அடுத்த சீசனில் சிஎஸ்கே அணிக்காக தோனி மீண்டும் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த ஏலத்துக்கு முன் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் தக்க வைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை பிசிசிஐ அதிகரித்தால் மட்டுமே தோனி 2025 ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்சமயத்தில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே மற்றும் பதிரனா ஆகியோரை தக்க வைக்க சென்னை அணி நிர்வாகம் விரும்புவதாக செய்திகள் காணப்படுகின்றன. எனவே தக்க வைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை 5 அல்லது ஆறாக அதிகரித்தால் மட்டுமே 2025 சீசனில் விளையாடுவேன் என்று சிஎஸ்கே உரிமையாளர் என். ஸ்ரீனிவாசன் அவர்களிடம் தோனி பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com