ஐ.பி.எல்.2025: மும்பையை வீழ்த்தி டாப்-2 இடத்தை உறுதி செய்த பஞ்சாப்

பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்கள் அடித்தார்.
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதில் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற 69-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 184 ரன்கள் எடுத்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 57 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப், மார்கோ ஜான்சன் மற்றும் விஜய்குமார் வைஷாக் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரியன்ஷ் ஆர்யா - பிரம்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரம்சிம்ரன் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து ஜோடி சேர்ந்த பிரியன்ஷ் ஆர்யா - ஜோஷ் இங்கிலிஸ் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. பலம் வாய்ந்த மும்பை பந்துவீச்சை எளிதில் கையாண்ட இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
பஞ்சாப் அணிக்கு வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடி இலக்கை நெருங்கிய தருவாயில் பிரிந்தது. ஆர்யா 62 ரன்களிலும், ஜோஷ் இங்கிலிஸ் 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவரின் விக்கெட்டையும் சாண்ட்னர் கைப்பற்றினார்.
இறுதி கட்டத்தில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். 18.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த பஞ்சாப் கிங்ஸ் 187 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது. ஐயர் 26 ரன்களுடனும், வதேரா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த பஞ்சாப் கிங்ஸ் 19 புள்ளிகளுடன் முதல் அணியாக டாப் 2 இடத்தை உறுதி செய்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் 4-வது பிடித்தது.






