ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்.. உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா

image courtesy:PTI
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது.
சண்டிகர்,
18-வது ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ரன் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 184 ரன்னில் அடங்கியது. ஷசாங் சிங்கின் (61 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 6 சிக்சர்) அதிரடி வீணானது. இதனால் பஞ்சாப் அணி முதல் கோப்பையை வெல்லும் வாய்ப்பு பறிபோனது.
இருப்பினும் இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாக செயல்பட்டது. புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து அசத்தியது. அத்துடன் பல அன்கேப்டு வீரர்கள் அசத்தலாக செயல்பட்டனர். இதனால் இனி வரும் சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் கண்டிப்பாக கவனிக்கத்தக்க அணிகளில் ஒன்றாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த சீசனில் 2-வது இடம் பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான பிரீத்தி ஜிந்தா நேற்று தனது எக்ஸ் தளத்தில் உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இந்த சீசன் நாங்கள் விரும்பியபடி முடிவடையவில்லை. ஆனால் இந்த பயணம் அற்புதமாக இருந்தது. இந்த தொடர் உற்சாகமாகவும், பொழுதுபோக்காகவும் ஊக்கமளிப்பதாகவும் இருந்தது. எங்களது இளம் வீரர்கள் தொடர் முழுவதும் காட்டிய போராட்டம், மனஉறுதி, அவர்களின் தைரியம் என்னை வெகுவாக கவர்ந்தது. இதே போல் எங்களது கேப்டன் முன்னின்று வழிநடத்திய விதம், சர்வதேச போட்டியில் ஆடாத இந்திய வீரர்கள் இந்த சீசனில் ஆதிக்கம் செலுத்திய விதம் மிகவும் பிடித்திருந்தது!
இந்த ஐ.பி.எல். எங்களுக்கு தனித்துவமானது. காயம், சர்வதேச போட்டிக்கு திரும்பியது என சில முன்னணி வீரர்களை இழந்த போதிலும் கூட நிறைய சாதனைகளை படைத்தோம். தொடரின் பாதியில் ஒரு இடைநிறுத்தத்தை கண்டோம். இதனால் உள்ளூர் ஆட்டங்கள் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. ஒரு ஸ்டேடியத்தில் பாதியில் வெளியேற்றப்பட்டோம். ஆனாலும் ஒரு தசாப்தத்திற்குப் பிறகு நாங்கள் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தோம், ஒரு அற்புதமான இறுதிப்போட்டியில் இறுதி வரை போராடினோம்.
பஞ்சாப் அணியில் ஆடிய ஒவ்வொரு வீரரையும் நினைத்து பெருமிதம் கொள்கிறேன். அணியின் பயிற்சி ஊழியர்கள், நிர்வாகிகள் மற்றும் எங்கள் அணிக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம் என்றால் அது உங்களின் ஆதரவால் மட்டுமே சாத்தியமானது. அடுத்த சீசனில் இன்னும் வலுவாக மீண்டு வந்து சாதிப்போம் என்று உறுதி அளிக்கிறேன். ஏனெனில் எங்களது வேலை பாதிதான் முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு ஸ்டேடியத்தில் மீண்டும் சந்திப்போம். அதுவரை எல்லோரும் பத்திரமாக இருங்கள். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார்.






