ஐ.பி.எல்.2025: நடராஜனுக்கு ஏன் அதிக வாய்ப்புகள் வழங்கவில்லை..? டெல்லி பயிற்சியாளர் விளக்கம்

image courtesy:PTI
ஐ.பி.எல். 2025 தொடரில் நடராஜன் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
புதுடெல்லி,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த 3-ம் தேதி நிறைவு பெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது.
இதில் அக்சர் படேல் தலைமையில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது 5-வது இடம்பெற்று பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
முன்னதாக இந்த சீசனில் டெல்லி அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. ரூ.10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டாலும் அவர் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில் நடராஜனுக்கு ஏன் அதிகளவில் வாய்ப்பு இந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் வழங்கப்படவில்லை? என்பது குறித்து டெல்லி அணியின் பயிற்சியாளரான ஹேமங் பதானி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசிய அவர் கூறுகையில், "ஒரு வீரருக்கு ரூ.11 கோடி செலவழித்து அவரை ஏன் பெஞ்சில் வைக்க வேண்டும்? மிடில் & இறுதி ஓவர்களுக்காகவே நாங்கள் அவரை வாங்கினோம். துரதிர்ஷ்டவசமாக, காயத்திலிருந்து திரும்பிய பிறகு நடராஜன் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை. இந்த சீசன் முழுவதும் காயத்துடனே இருந்தார், அதனால்தான் அவர் விளையாடவில்லை" என்று கூறினார்.






