

ஐதராபாத்,
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது. காயம் காரணமாக கடந்த ஒரு மாதமாக இங்கிலாந்து சென்று அங்கு ஓய்வில் இருந்த ஆர்சிபி அணியின் அதிரடி தொடக்க வீரர் பில் சால்ட், மீண்டும் இந்தியா திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சின்னசாமி மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின் போது, பவுண்டரியைத் தடுக்க டைவ் செய்ததில் பில் சால்ட்டுக்கு இடது கை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காயத்தில் இருந்து குணமடையவும், தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடவும் அவர் இங்கிலாந்துக்கு திரும்பினார்.
தற்போது சால்ட் முழுமையாக குணமடைந்து மீண்டும் இந்தியா திரும்பி ஆர்சிபி அணியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பில் சால்ட் இல்லாத போதிலும், ஆர்சிபி அணி ஏற்கனவே பிளே-ஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. காயமடைவதற்கு முன்பு, பில் சால்ட் ஆர்சிபி அணிக்காக விளையாடிய 6 இன்னிங்ஸ்களில் 168.33 என்ற ஸ்டிரைக் ரேட்டில் 202 ரன்கள் குவித்து அணிக்கு அதிரடியான தொடக்கத்தை தந்தார்.
அவர் இல்லாததால், இங்கிலாந்தை சேர்ந்த சக வீரரான ஜேக்கப் பெத்தல் விராட் கோலியுடன் இணைந்து தொடக்க வீரராகக் களம் இறங்கினார். ஆனால் பெத்தல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. விளையாடிய 7 இன்னிங்ஸ்களில் வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் (அதிகபட்ச ஸ்கோர் 27). இதனால் சால்ட்டின் வருகை ஆர்சிபி அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.
முன்னதாக, ராய்ப்பூரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, கார்திக் தியாகி வீசிய பவுன்சர் பந்து தலையில் பலமாகத் தாக்கியதால் ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அந்த சூழ்நிலையில் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கி ஆர்சிபி அணிக்கு முக்கிய ரன்களைக் குவித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.