

அகமதாபாத்,
அகமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் 2026-ன் 30-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் திலக் வர்மா வெறும் 45 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இந்த வெற்றிக்குப் பிறகு கேப்டன் ஹர்திக் பாண்டியா, சதம் விளாசிய திலக் வர்மாவை பாராட்டினார். அவர் பேசுகையில், "திலக் வர்மாவிடம் உள்ள திறமைக்கு அவருக்கு அதிக அறிவுரைகள் தேவையில்லை. அவர் தனது திறமையை வெளிப்படுத்த வேண்டிய சரியான நேரம் இது. இந்த சதம் திலக் வர்மாவுக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் மிகவும் தேவையானது," என்று கூறினார்.
நான்கு தொடர் தோல்விகளுக்குப் பிறகு கிடைத்துள்ள இந்த வெற்றி மிகவும் முக்கியமானது என்று ஹர்திக் குறிப்பிட்டார். குறிப்பாக, "மும்பை அணிக்கு சாதகமில்லாத அகமதாபாத் மைதானத்தில் வெற்றி பெற்றது மிகுந்த திருப்தி அளிக்கிறது," என்றார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது (6 போட்டிகளில் 4 புள்ளிகள்). மும்பை அணி அடுத்து 23-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொள்கிறது.