

சென்னை,
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி, இன்று நடைபெறும் ஐபிஎல் 2026 குவாலிபையர் 1 போட்டியில் குஜராத் அணியை எதிர்கொள்கிறது. தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இரு அணிகளும் தங்களது இரண்டாவது ஐபிஎல் பட்டத்தை நோக்கி முன்னேறி உள்ள நிலையில், இந்த மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், போட்டியில் அழுத்தத்தை சமாளித்து அமைதியாக செயல்படும் அணிக்கே வெற்றி கிடைக்கும் என்று ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:
"இரு அணிகளுமே இந்த சீசன் முழுவதும் சிறப்பாக விளையாடியுள்ளன. குறிப்பிட்ட அந்த நாளில் எந்த அணி தங்களது திட்டங்களை சரியாக செயல்படுத்துகிறதோ, சிறந்த கிரிக்கெட்டை வெளிப்படுத்துகிறதோ, அழுத்தமான சூழ்நிலையிலும் அமைதியாக இருக்கிறதோ, அந்த அணியே வெற்றி பெறும். குவாலிபையர் 1 என்பது மிகப்பெரிய மேடை. பதற்றத்தைக் கட்டுப்படுத்தி, நாங்கள் செய்யும் விஷயங்களில் முழு நம்பிக்கையுடன் இருக்க வேண்டும்" என கூறினார்.
இந்த சீசனில் ஆர்சிபியின் மிகப்பெரிய பலம் பந்துவீச்சு துறையே என படிதார் குறிப்பிட்டார்.
"எங்களுடைய பலமே பந்துவீச்சுதான். குறிப்பாக பவர்பிளேயில் நாங்கள் எப்படி பந்துவீசுகிறோம் என்பதே முக்கியம். ரன்களை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அல்ல, விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற ஆக்ரோஷ மனநிலையோடு களம் இறங்குகிறோம். பவர்பிளேயிலேயே விக்கெட்டுகளை எடுக்க முயற்சிப்போம். அதைத்தான் புவனேஷ்வர் குமார், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ரசிக் சலாம் ஆகியோர் தொடர்ந்து செய்து வருகிறார்கள்’ என்றார்.
கடந்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடியவெங்கடேஷ் ஐயர் குறித்து படிதார் பாராட்டு தெரிவித்தார்.
"எனக்கு வென்கியை சிறுவயதிலிருந்தே தெரியும். எந்த சூழ்நிலையிலும் விளையாடும் திறனும், பேட்டிங் வரிசையில் எந்த இடத்திலும் விளையாடத் தயாராக இருக்கும் நெகிழ்வுத்தன்மையும் எனக்கு மிகவும் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்காத நேரங்களிலும் அவர் கடினமாக உழைத்து தன்னைத் தயாராக வைத்திருந்தார். வாய்ப்பு கிடைத்தவுடன் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்" என்றார்.
தனது கேப்டன்சி அனுபவம் குறித்து பேசிய படிதார், அணியின் சீனியர் வீரர்கள் தனக்கு பெரும் ஆதரவாக இருப்பதாக கூறினார்.
"கேப்டனாக நான் கூடுதலாக எதையும் செய்ய வேண்டியதில்லை. பயிற்சியாளர்கள், நிர்வாகம் மற்றும் சீனியர் வீரர்களின் அனுபவம் எனக்கு மிகவும் உதவுகிறது. விராட் கோலி, தேவ்தத் படிக்கல், ஜிதேஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் டிம் டேவிட் போன்றோரிடமிருந்து பல ஆலோசனைகள் கிடைக்கின்றன. அமைதியாக இருப்பதும், எனது உள்ளுணர்வை நம்புவதுமே எனது பலம்" என்றார்.
இந்த சீசனில் ஆர்சிபியின் பந்துவீச்சு தாக்குதலுக்கு முக்கிய தூணாக திகழும் புவனேஷ்வர் குமார் குறித்து படிதார் புகழாரம் சூட்டினார்.
"புவி மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். அவருக்கு தனது பலம் நன்றாகத் தெரியும். இளம் பந்துவீச்சாளர்களுக்கு அவர் வழங்கும் ஆலோசனைகளும் வழிகாட்டுதல்களும் அணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கின்றன. ஐபிஎல்லில் பந்துவீச்சாளர்களுக்கு எப்போதும் சவால்கள் இருக்கும். சில நேரங்களில் அதிக ரன்களும் செல்லலாம். ஆனால் அந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையுடனும், தனது பொறுப்பில் தெளிவுடனும் இருப்பதே வெற்றிக்கான முக்கிய அம்சமாகும்" என்றார்.