

சென்னை,
ஐபிஎல் வரலாற்றில் கடைசி பந்து வரை சென்ற ‘திரில்’ வெற்றிகளில் மூன்றாவது முறையாக பங்கேற்று, வேகப்பந்து வீச்சாளர் ஆவேஷ் கான் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி 20 ஓவர்களில் 181/4 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 182/7 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் வெற்றி பெற்றது.
போட்டியின் கடைசி பந்தில் முகுல் சவுத்ரி பந்தை அடிக்காமல் விட்டார். அப்போது விக்கெட் கீப்பர் பந்தை பிடித்து ஸ்டம்பில் அடிக்க முயன்றார், அதற்குள் மறு முனையில் நின்ற ஆவேஷ் கான் 1 ரன் ஓடினார். இதன் மூலம், கடைசி பந்து வரை சென்ற ‘திரில்’ வெற்றிகளில் மூன்றாவது முறையாக அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு ஆர்சிபிக்கு எதிரான போட்டியில், கடைசி பந்தில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தை அடிக்காமல் விட்ட ஆவேஷ் கான், 1 ரன் ஓடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்தார். அந்த வெற்றிக்குப் பிறகு அவர் ஹெல்மெட்டை தூக்கி வீசியது வைரலானது.
அதேபோல், 2024 ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்தப் போட்டியில் 9-வது விக்கெட்டாக 17.4-ஆவது ஓவரில் களமிறங்கிய ஆவேஷ் கான், ஒரு பந்துகூட எதிர்கொள்ளாமல் அணியின் வெற்றிக்கு காரணமானது குறிப்பிடத்தக்கது.