

தர்மசாலா,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2 ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய 61-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியன் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க பேட்ஸ்மேனான ஜேக்கப் பெத்தேல் 11 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர், கோலியுடன் சேர்ந்து அதிரடி காட்டினார். இருவரின் அதிரடியால் பெங்களூரு அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது.
சிறப்பாக விளையாடிய கோலி, அரைசதம் கடந்த நிலையில், 58 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் வெஸ்கடேஷ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 73 ரன்கள் எடுத்தார். இறுதியில் டிம் டேவிட் அதிரடி காட்ட, பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.
அதிரடி தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரப்சிம்ரன் சிங் 2 ரன்னிலும், பிரியான்ஸ் ஆரியா ரன் ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஒரு கட்டத்தில் 93 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது.
அப்போது ஸ்டோய்னிஸ் - ஷ்ஷாங் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஸ்டோய்னிஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். ஷஷாங் கடைசி ஓவர் வரை நின்று போராடினார். ஆனால் அவரும் 56 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்களே எடுத்தது.
இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், பெங்களூரு அணி நடப்பு தொடரில் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.