

ஜெய்ப்பூர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 43-வது லீக் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான் - டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 6 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 4-வது இடத்தில் நீடிக்கிறது. டெல்லி அணி ஆடிய 8 போட்டிகளில் 3 வெற்றி மற்றும் 5 தோல்விகளுடன் தள்ளாடி வருகிறது. குறிப்பாகக் கடைசி 3 ஆட்டங்களில் அந்த அணி தொடர் தோல்விகளைச் சந்தித்துள்ளது.
இவ்விரு அணிகளும் ஐ.பி.எல். வரலாற்றில் இதுவரை 30 முறை மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 15 வெற்றிகளைப் பெற்று சமபலத்துடன் உள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று ராஜஸ்தான் தனது ஆதிக்கத்தைத் தொடருமா அல்லது டெல்லி சரிவிலிருந்து மீளுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.