

ஆமதாபாத்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் 42-வது லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்புத் தொடரில் 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள குஜராத் அணி 4 வெற்றி, 4 தோல்விகளுடன் உள்ளது. முந்தைய ஆட்டத்தில் பலமான சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய உற்சாகத்துடன் இன்று களம் இறங்குகிறது. மறுபுறம் 8 ஆட்டங்களில் 6 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது பெங்களூரு. கடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை குறைந்த ரன்களில் சுருட்டி, அதிவேகமாக இலக்கை எட்டி சாதனை படைத்தது.
இதுவரை இவ்விரு அணிகளும் 7 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் பெங்களூரு 4 முறையும் குஜராத் 3 முறை வெற்றிபெற்றுள்ளது.
குஜராத்துக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 206 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்து பெங்களூரு வெற்றி பெற்றிருந்தது. அந்த ஆதிக்கத்தைத் தொடர ஆர்.சி.பி-யும், முந்தைய தோல்விக்கு பழிதீர்க்க குஜராத்தும் மல்லுக்கட்டும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்குக் குறைவிருக்காது.