

புதுடெல்லி,
காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சேப்பாக்கத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பையுடனான போட்டி முடிந்து சென்னை அணியினர் திரும்பிய நிலையில், கொல்கத்தா வீரர்களும் நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர்.
வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் ஓட்டல்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். வீரர்கள் தங்குமிடத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அந்த ஓட்டல்களுக்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் போட்டி நடைபெறும் மைதானத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், மைதானத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மைதானத்தின் அனைத்து வாயில்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஐபிஎல் நிர்வாகம் உறுதியாக உள்ளது. இரவு 8 மணிக்கு போட்டி துவங்க உள்ளது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை செயலர் ராஜீவ் கவுபாவை ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா சந்தித்து பேசினார். அப்போது ஐ.பி.எல். போட்டிகளுக்கு மத்திய படையினரின் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை வைத்தார்.
அப்போது, ஐபிஎல் போட்டியை நடத்த போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராஜீவ் சுக்லாவிடம், உள்துறை செயலர் உறுதி அளித்துள்ளதாக ஏ.என்.ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னர் பேட்டி அளித்த ஐபிஎல் தலைவர் ராஜிவ் சுக்லா சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக உள்ளன; போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படாது என கூறினார்