

புதுடெல்லி
10 அணிகள் பங்கேற்றுள்ள 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடந்த 48-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதல் சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது.
டெல்லி அணியில் நிலைத்து விளையாடிய சமீர் ரிஸ்வி 40 ரன்கள், ஆட்டமிழந்த திரிஸ்டன் ஸ்டப்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். சென்னை அணியில் நூர் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 155 என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி விளையாட தொடங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 6 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
எனினும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் நிலைத்து ஆடி 7 பவுண்டரிகள், 6 சிக்சர்கள் விளாசி 87 ரன்கள் குவித்துள்ளார். மற்றொரு வீரரான உர்வில் பட்டேல் 17 ரன்களில் வெளியேறினார். ஆனால், அடுத்து வந்த கார்த்திக் ஷர்மா அதிரடியாக விளையாடினார். சாம்சனுடன் கைகோர்த்த அவர், 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாசி 41 ரன்கள் எடுத்துள்ளார்.
இருவரும் ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடினர். இதனால், சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்து வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி சார்பில் அக்சர் பட்டேல் மற்றும் லுங்கி கிடி தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது.