

அபுதாபி,
துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 38வது ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். பஞ்சாப் பந்துவீச்சாளர் நீஷம் வீசிய 4வது ஓவரில் ப்ரித்வீஷா(7 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அயர்(14 ரன்கள்) முருகன் அஸ்வின் பந்துவீச்சில் 9வது ஓவரில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரிஷப் பண்ட்(14 ரன்கள்) மேக்ஸ்வெல் வீசிய 14வது ஓவரில், மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆகி விக்கெட்டை இழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் 9 ரன்களில் ஷமி வீசிய பந்தில் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் இறுதி வரை நிலைத்து நின்று அதிரடி காட்டினார் ஷிகர் தவான். பஞ்சாப் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த தவான் 3 சிக்ஸர்களையும், 12 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். டெல்லி அணியின் ஸ்கோரை தனி ஆளாக நின்று உயர்த்திய ஷிகர் தவான் 28 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரில் தவானின் 4வது தொடர் அரைசதம் இதுவாகும்.
தொடர்ந்து சதத்தை நோக்கி முன்னேறிய தவான், இறுதி வரை நிலைத்து நின்று ஆடி 61 பந்துகளில் 106 ரன்கள் குவித்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் குவித்தது. ஷிம்ரன் ஹெட்மெயர்(10 ரன்கள்) மற்றும் ஷிகர் தவான்(106 ரன்கள்) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதனை தொடர்ந்து 165 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பஞ்சாப் அணி தற்போது விளையாடி வருகிறது.