ஐ.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டெல்லி அணி சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி
Published on

சென்னை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 20-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி மோதியது. டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் தவான் களமிறங்கினர். தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுமுனையில் ப்ரித்வீஷா 7 பவுண்டரிகளையும் ஒரு சிக்சரையும் பறக்கவிட்டு அரைசதத்தைக் கடந்தார். தவான் 28 ரன்களில் பவுல்ட் ஆகி வெளியேறினார்.

அடுத்து வந்த ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். ப்ரித்வீஷா 53 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஸ்டீவ் ஸ்மித் 34 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 159 ரன்கள் குவித்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக எஸ்.கவுல் 2 விக்கெட்டுகளும், ரஷீத் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 160 ரன்கள் என்ற இலக்குடன் விளையாட துவங்கி ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். டேவிட் வார்னர் 6 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற அடுத்த விக்கெட்டுக்கு கேன் வில்லியம்சன் களமிறங்கினார்.

51 பந்துகளில் 8 பவுண்டரிகளை விளாசிய கேன் வில்லியம்சன் 66 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவேஷ் கான் வீசிய பந்தில் ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களில் கேட்ச் ஆக்கி ஆட்டமிழந்தார். 20-வது ஓவரில் ஜெகதீஷா சுஷித் ஒரு சிக்சரை விளாசவே, ஐதராபாத் அணி மொத்தமாக 159 ரன்களை குவித்தது.

இதனால் இந்த சீசனின் முதல் சூப்பர் ஓவர் இன்று வீசப்பட்டது. ஐதராபாத் அணியின் பேட்ஸ்மேன்களாக டேவிட் வார்னர் மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கிய நிலையில், அக்சர் பட்டேல் பந்துவீசினார். இந்த சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணி 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ஒரு ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு டெல்லி அணியின் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பண்ட் களமிறங்கினர். ரஷீத் கான் பந்துவீச்சில் ரிஷப் பண்ட் ஒரு பவுண்டரியை விளாசினார். இறுதியாக சூப்பர் ஓவரில் 8 ரன்கள் அடித்து டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com