

சென்னை,
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத்- கொல்கத்தா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 56 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். பந்து வீச்சை பொருத்தவரை ரஷித் கான், முகம்மது நபி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இதில் வார்னர் 3 ரன்னிலும், சகா 7 ரன்னிலும் வெளியேற, அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம்கடந்தனர். இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 55 ரன்களும், அவரைத்தொடர்ந்து நபி 14 ரன்களும், விஜய் சங்கர் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மணிஷ் பாண்டே 61 (44) ரன்களும், அப்துல் சமது 19 (8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.