ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பயணத்தை தொடரும் ஆவலில் லக்னோ..!!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோத உள்ளன.
ஐ.பி.எல். கிரிக்கெட்: வெற்றிப்பயணத்தை தொடரும் ஆவலில் லக்னோ..!!
Published on

மும்பை,

நடப்பு ஐ.பி.எல். தொடரில் அறிமுக அணியாக இடம் பிடித்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 2 வெற்றி (சென்னை, ஐதராபாத்துக்கு எதிராக), ஒரு தோல்வி (குஜராத்துக்கு எதிராக) என்று 4 புள்ளிகளுடன் உள்ளது. முந்தைய ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் லோகேஷ் ராகுல், தீபக் ஹூடாவின் அரைசதமும், கடைசி ஓவரில் வேகப்பந்து வீச்சாளர் ஜாசன் ஹோல்டர் 3 விக்கெட் வீழ்த்தியதும் வெற்றிக்கு வழிவகுத்தது. அதற்கு முன்பாக சென்னைக்கு எதிராக 211 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்தனர். தற்போது ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் தங்களை ஆயத்தப்படுத்தி வருகிறார்கள்.

தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்த டெல்லி அணி அடுத்த லீக்கில் குஜராத்திடம் 14 ரன் வித்தியாசத்தில் பணிந்தது. ஆஸ்திரேலிய அதிரடி வீரர் டேவிட் வார்னர் அணியுடன் இணைந்ததுடன், 3 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து விட்டார். இதே போல் காயத்தால் அவதிப்பட்ட அதிவேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா உடல்தகுதி பெற்று விட்டார். இருவரும் இன்றைய ஆட்டத்துக்கு அணித் தேர்வுக்கு தயாராக இருப்பதாக டெல்லிஅணியின் உதவி பயிற்சியாளர் வாட்சன் குறிப்பிட்டார். இவர்களது வருகை டெல்லி அணியை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மொத்தத்தில் இந்தியாவின் வருங்கால கேப்டன்கள் என்று வர்ணிக்கப்படும் லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட் இடையிலான நேருக்கு நேர் மோதலில் யாருடைய கை ஓங்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com