

மும்பை,
பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. கடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 209 ரன்கள் குவித்ததுடன் எதிணியை 155 ரன்னுக்குள் மடக்கியது.
பஞ்சாப் அணியில் பேட்டிங்கில் ஷிகர் தவான் (402 ரன்கள்), லிவிங்ஸ்டன், பானுகா ராஜபக்சே, பேர்ஸ்டோ ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். கேப்டன் மயங்க் அகர்வாலின் பேட்டில் இருந்து குறிப்பிடத்தக்க ரன் வரவில்லை. பந்து வீச்சில் ரபடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், ரிஷி தவான், ஒடியன் சுமித் ஆகியோர் பலம் சேர்க்கிறார்கள்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி முந்தைய லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை சாய்த்தது. டெல்லி அணியில் பேட்டிங்கில் டேவிட் வார்னர், ரிஷாப் பண்ட், மிட்செல் மார்ஷ், ரோமன் பவெலும், பந்து வீச்சில் குல்தீப் யாதவ், கலீல் அகமது, ஷர்துல் தாக்குர், முஸ்தாபிஜூர் ரகுமான், அன்ரிச் நோர்டியா நல்ல நிலையில் உள்ளனர். டையாய்டு காய்ச்சல் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் கடந்த 3 ஆட்டங்களை தவற விட்ட பிரித்வி ஷா குணமடைந்து அணியினருடன் இணைந்து இருக்கிறார். அவர் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை.
பஞ்சாப் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இந்த ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க முடியும். தோல்வி அடைந்தால் அடுத்த சுற்று வாய்ப்பு மங்கி விடும். எனவே இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.