ஐ.பி.எல்.: டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து அக்சர் படேலை நீக்க முடிவு..?


ஐ.பி.எல்.: டெல்லி அணியின் கேப்டன் பதவியிலிருந்து அக்சர் படேலை நீக்க முடிவு..?
x

image courtesy:PTI

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் டெல்லி அணி 5-வது இடத்தை பிடித்தது.

புதுடெல்லி,

ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான (2026) பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன.

இந்த சீசனில் அக்சர் படேல் தலைமையில் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியானது புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தது. ஆரம்ப கட்டத்தில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற அந்த அணி எளிதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும் என்று அனைவரும் நினைத்தனர். ஆனால் 2-ம் பாதியில் மொத்தமாக சொதப்பிய அந்த அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது.

இதில் கேப்டனாக மட்டுமன்றி வீரராகவும் அக்சர் படேலின் செயல்பாடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதன் காரணமாக அடுத்த (2026) ஐ.பி.எல். தொடருக்கு முன் அந்த அணியில் சில மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், அடுத்த சீசனுக்கு முன் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து அக்சர் படேலை நீக்க அந்த அணி நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் அவர் அணியின் முக்கிய வீரராக தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி அணியின் அடுத்த கேப்டன் பதவிக்கான வாய்ப்பில் கே.எல்.ராகுல், பாப் டு பிளெஸ்சிஸ் மற்றும் ஸ்டப்ஸ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுவதாக தெரிகிறது.

1 More update

Next Story