ஐ.பி.எல்.: பெங்களூரு அணியின் மோசமான சாதனையை சமன் செய்த டெல்லி கேப்பிடல்ஸ்

மும்பைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டெல்லி தோல்வியடைந்தது.
புதுடெல்லி,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 59 ரன்கள் அடித்தார். டெல்லி தரப்பில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 19 ஓவர்களில் 193 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 89 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் கரண் சர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கரண் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையும் சேர்த்து அருண்ஜெட்லி மைதானத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சந்தித்த 45-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் அதிக தோல்விகளை சந்தித்த அணி என்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் மோசமான சாதனையை சமன் செய்துள்ளது.
பெங்களூரு அணி சின்னசாமி மைதானத்தில் 45 தோல்விகளை சந்தித்துள்ளது.






