ஐ.பி.எல்.: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து டிராவிட் திடீர் விலகல்

இவர் கடந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

ஜெய்ப்பூர்,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.

முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் அடுத்த சீசனுக்கான (2026) மினி ஏலத்திற்கு முன்பு தன்னை டிரேடிங் முறையில் மாற்றவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் அடுத்த சீசனுக்கு முன் அந்த பதவியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இது பலரது மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இவரது விலகலுக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த வருடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட டிராவிட் இந்த ஒரு சீசனில் மட்டுமே அந்த பதவியில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com