ஐ.பி.எல். இறுதிப்போட்டி: டிம் டேவிட் விளையாடுவாரா..? பெங்களூரு கேப்டன் பதில்

18-வது ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது.
அகமதாபாத்,
18-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் 'பிளே-ஆப்' சுற்றுகளின் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.
இந்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.
இதனிடையே பீல்டிங்கின்போது ஏற்பட்ட காயம் காரணமாக பெங்களூரு அணியின் பினிஷரான டிம் டேவிட் கடந்த 2 போட்டிகளை தவறவிட்டார். இதனால் அவர் இறுதிப்போட்டியில் களமிறங்குவாரா? என்ற கேள்வி நிலவியது.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவது குறித்து பெங்களூரு அணியின் கேப்டனான ரஜத் படிதாரிடம் நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த படிதார், " இறுதிப்போட்டியில் டிம் டேவிட் விளையாடுவாரா என்பது பற்றி இதுவரை எனக்கு தெரியாது.மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகிறது. இன்று மாலைக்குள் முடிவு தெரிந்துவிடும்" என்று கூறினார்.






