300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். எட்டியுள்ளது - கே.கே.ஆர். வீரர் பேச்சு

Image Courtesy: @IPL
இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் குஜராத், டெல்லி, பெங்களூரு, மும்பை அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், இந்த தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. ஐ.பி.எல். தொடரில் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. ஐதராபாத் அணி கடந்த சீசனில் மிக எளிதாக 250+ ரன்களை கடந்து அசத்தியது. இதனால் ஐ.பி.எல். தொடரில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்களை அந்த அணி குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஐ.பி.எல். தொடரில் எந்த அணி 300 ரன்களை முதல் முறையாக கடக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். எட்டியுள்ளது என கே.கே.ஆர் வீரர் ரிங்கு சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
எங்களால் 300 ரன்கள் குவிக்க முடியும். ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். எட்டி உள்ளது. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் 262 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்தது. நடப்பு தொடரில் அனைத்து அணிகளும் வலுவாக உள்ளன. எந்த ஒரு அணியாலும் 300 ரன்கள் குவிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.