ஐபிஎல் 2008 முதல் 2026 வரை: 'ஹிட் விக்கெட்'டான வீரர்கள்... முதலில் யார் தெரியுமா?

பேட்ஸ்மேன் தனது பேட் அல்லது உடலால் தவறுதலாக ஸ்டம்புகளை தட்டும்போது இந்த அவுட் வழங்கப்படும்.
ஐபிஎல் 2008 முதல் 2026 வரை:  'ஹிட் விக்கெட்'டான வீரர்கள்... முதலில் யார் தெரியுமா?
Published on

சென்னை,

கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் போல்ட், கேட்ச், எல்பிடபிள்யூ அல்லது ரன் அவுட் போன்ற வழிகளில் ஆட்டமிழப்பதை ரசிகர்கள் அடிக்கடி பார்க்கிறார்கள். ஆனால், ஒரு பேட்ஸ்மேன் 'ஹிட் விக்கெட்' ஆவது மிகவும் அரிதாகவே நடக்கும் ஒன்று. பேட்ஸ்மேன் தனது பேட் அல்லது உடலால் தவறுதலாக ஸ்டம்புகளைத் தட்டும்போது இந்த அவுட் வழங்கப்படும்.

2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மொத்தம் 19 முறை பேட்ஸ்மேன்கள் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்துள்ளனர்.

பிளே-ஆப் சுற்றில் நடந்த இரண்டு ஹிட் விக்கெட்டுகள்

ஐபிஎல் பிளே-ஆப் சுற்றுகளில் இதுவரை வெறும் இரண்டு முறை மட்டுமே ஹிட் விக்கெட் சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிலும் ஆச்சரியமாக, இரண்டுமே குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்களுக்கே நிகழ்ந்துள்ளன.

சாய் சுதர்சன் (2026 குவாலிபையர்-1)

தரம்சாலாவில் ஆர்சிபி அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற குவாலிபையர்-1 போட்டியில் 14 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன், ஜேகப் டபி வீசிய பந்தை அடிக்க முயன்றபோது பேட் கையை விட்டு நழுவியது. பிட்சில் பட்ட பேட் நேராக ஸ்டம்புகளை அடித்ததால் அவர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் இரண்டு முறை ஹிட் விக்கெட் ஆன முதல் வீரர் என்ற துரதிர்ஷ்டமான சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பொல்லார்ட் பந்துவீச்சில் இதேபோல் அவுட் ஆகியிருந்தார்.

குசல் மெண்டிஸ் (2025 எலிமினேட்டர்)

ஐபிஎல் பிளே-ஆப் வரலாற்றில் முதல் ஹிட் விக்கெட்டாக குஜராத் டைட்டன்ஸ் வீரராக குசல் மெண்டிஸ் பெயர் பதிவு செய்யப்பட்டது. மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், மிட்செல் சான்ட்னர் பந்துவீச்சில் புல் ஷாட் ஆட முயன்றபோது அவரது கால் ஸ்டம்பில் பட்டதால் அவுட் ஆனார்.

சமீபத்திய ஹிட் விக்கெட் சம்பவங்கள்

க்ருணால் பாண்டியா (2025)

லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில், பேட் கம்மின்ஸ் வீசிய பந்தை தடுக்க முயன்றபோது ஆர்சிபி ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியாவின் பேட் ஸ்டம்பில் பட்டதால் அவர் ஹிட் விக்கெட் ஆனார்.

அபினவ் மனோகர் (2025)

மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்து வீச்சாளர் போல்ட் பந்துவீச்சில், 43 ரன்கள் எடுத்திருந்தபோது அபினவ் மனோகர் ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார்.

ஆயுஷ் பதோனி (2023)

ஆர்சிபிக்கு எதிராக 213 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணிக்காக விளையாடிய ஆயுஷ் பதோனி, பார்னெல் பந்தில் சிக்ஸர் அடித்தார். ஆனால் ஷாட்டை முடித்தபோது பேட் ஸ்டம்பை தட்டியதால் அந்த சிக்ஸர் ரத்து செய்யப்பட்டதுடன் அவர் ஹிட் விக்கெட் என அறிவிக்கப்பட்டார்.

ஐபிஎல்லின் முதல் ஹிட் விக்கெட்

ஐபிஎல் வரலாற்றின் முதல் ஹிட் விக்கெட் சம்பவம் 2008-ம் ஆண்டு நடந்தது. பஞ்சாப் அணியின் எஸ். ஸ்ரீசாந்த் பந்துவீச்சில், மும்பை இந்தியன்ஸ் வீரர் முசாவிர் கோட்டே ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். அதே ஆண்டு மிஸ்பா-உல்-ஹக்கும் எஸ். ஸ்ரீசாந்த் பந்துவீச்சில் ஹிட் விக்கெட் ஆனார். அதன்பிறகு 2009-ல் ஸ்வப்னில் அஸ்நோத்கர், 2012-ல் ரவீந்திர ஜடேஜா மற்றும் சௌரப் திவாரி ஆகியோர் இந்த அரிய முறையில் அவுட் ஆனார்கள்.

ஒரே சீசனில் 3 வீரர்கள் ஹிட் விக்கெட்!

2016-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் யுவராஜ் சிங், தீபக் ஹுடா மற்றும் டேவிட் வார்னர் ஆகிய மூன்று முக்கிய வீரர்கள் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து 2017-ல் ஷெல்டன் ஜாக்சன், 2019-ல் ரியான் பராக், 2020-ல் ஹர்திக் பாண்டியா மற்றும் ரஷீத் கான், 2021-ல் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com