ஐ.பி.எல்.: கே.எல்.ராகுலை வாங்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முயற்சி..?

image courtesy:PTI
இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் கே.எல்.ராகுல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
கொல்கத்தா,
ஐ.பி.எல்.தொடரின் 18-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த சீசனுக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன. ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சாம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்பட்டன.
அந்த வரிசையில் முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் அந்த பதவியில் இருந்து சில தினங்களுக்கு முன் விலகினார். மேலும் அந்த அணியின் ஆல் ரவுண்டர் வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷனை டிரேடிங் முறையில் வாங்க கொல்கத்தா நிர்வாகம் முயற்சித்து வருவதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தற்போது வெளியான தகவல் படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து டிரேடிங் முறையில் முன்னணி வீரரான கே.எல்.ராகுலை வாங்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் அடுத்த சீசனில் அவரை கேப்டனாக நியமிக்க கொல்கத்தா நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.






