ஐ.பி.எல்.: லக்னோ வீரர் திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாட தடை.. காரணம் என்ன..?

திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்தியதை வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகிறார்.
லக்னோ,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்றிரவு அரங்கேறிய 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் ஜெயித்த ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர். ஐதராபாத் தரப்பில் இஷான் மலிங்கா 2 விக்கெட்டும், ஹர்ஷல் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் 206 ரன் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 206 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 59 ரன்கள் அடித்தார். லக்னோ தரப்பில் திக்வேஷ் ரதி 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை கைப்பற்றிய லக்னோ சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி கையில் எழுதி (நோட்புக்) அபிஷேக் சர்மாவை 'வெளியே போ' என்ற வகையில் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் சர்மா, திக்வேஷ் ரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.
இந்நிலையில் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.
இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளார். இதனால் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாது.






