ஐ.பி.எல்.: கே.கே.ஆர்., சி.எஸ்.கே., மும்பையை வீழ்த்தி தனித்துவ சாதனை படைத்த படிதார்

Image Courtesy: @IPL
நடப்பு ஐ.பி.எல் தொடரில் ரஜத் படிதார் தலைமையில் பெங்களூரு அணி ஆடி வருகிறது.
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக விராட் 67 ரன் எடுத்தார்.
மும்பை தரப்பில் பாண்ட்யா, பவுல்ட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 209 ரன் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக 12 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி பெற்றது. பெங்களூரு தரப்பில் க்ருனால் பாண்ட்யா 4 விக்கெட் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த தொடரில் பெங்களூரு அணி, கொல்கத்தா (ஈடன் கார்டன்), சி.எஸ்.கே. (சேப்பாக்கம்) அணிகளை அதன் சொந்த மைதானங்களில் வீழ்த்தி இருந்தது. இதன் வாயிலாக ஐ.பி.எல் தொடரில் ஒரே வருடத்தில் மும்பை, சென்னை, கொல்கத்தா அணிகளை அதனுடைய சொந்த மைதானங்களில் தோற்கடித்த 2வது அணி என்ற சாதனையை பெங்களூரு படைத்துள்ளது.
இதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) அணி 2012-ம் ஆண்டு இதே போன்ற வெற்றிகளை பெற்றுள்ளது. 2012-ம் ஆண்டு கொல்கத்தாவை ஆடம் கில்கிரிஸ்ட் தலைமையில் அதன் சொந்த மைதானத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. சென்னை மற்றும் மும்பையை அதன் சொந்த மைதானங்களில் டேவிட் ஹசி தலைமையில் பஞ்சாப் வீழ்த்தியிருந்தது.
ஆனால், இம்முறை ரஜத் படிதார் எனும் ஒரே கேப்டன் தலைமையில் அந்த 3 அணிகளையும் அதன் சொந்த மைதானங்களில் பெங்களூரு தோற்கடித்துள்ளது. இதன் வாயிலாக ஐ.பி.எல் தொடரில் ஒரே வருடத்தில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 3 அணிகளையும் அதனுடைய சொந்த மைதானங்களில் தோற்கடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ரஜத் படிதார் படைத்துள்ளார்.






