ஐ.பி.எல்.: மோசமான சாதனை படைத்த ரஷித் கான்

image courtesy:PTI
மும்பைக்கு எதிராக தோல்வி கண்ட குஜராத் தொடரில் இருந்து வெளியேறியது.
முல்லன்பூர்,
ஐ.பி.எல். தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 228 ரன்கள் குவித்தது.
மும்பை தரப்பில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 81 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 229 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 80 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறுவதற்கான தகுதி சுற்று 2-க்கு முன்னேறியது. தோல்வி கண்ட குஜராத் தொடரில் இருந்து வெளியேறியது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர் பந்து வீசி 2 சிக்சருடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
நடப்பு தொடரில் அவர் இதுவரை 33 சிக்சர்களை வாரி வழங்கி இருக்கிறார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனைக்கு ரஷித் கான் சொந்தக்காரர் ஆனார். இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு முகமது சிராஜ் தனது பந்து வீச்சில் 31 சிக்சர் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது.






