ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடி


ஐ.பி.எல்.: மாபெரும் சாதனை பட்டியலில் இணைந்த சாய் சுதர்சன் - சுப்மன் கில் ஜோடி
x

Image Courtesy: @IPL 

தினத்தந்தி 22 April 2025 7:04 AM IST (Updated: 22 April 2025 8:08 AM IST)
t-max-icont-min-icon

கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுதர்சன், கில் இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

கொல்கத்தா,

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 198 ரன்கள் குவித்தது. குஜராத் தரப்பில் சுப்மன் கில் 90 ரன்னும், சாய் சுதர்சன் 52 ரன்னும் எடுத்தனர்.

கில் - சுதர்சன் இணை முதல் விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்து அசத்தியது. தொடர்ந்து 199 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தா 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 39 ரன் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் ரஹானே 50 ரன் எடுத்தார்.

குஜராத் தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கில் - சுதர்சன் ஜோடி 100+ பார்ட்னர்ஷிப் அமைத்ததன் மூலம் மாபெரும் சாதனை பட்டியல் ஒன்றில் இணைந்துள்ளது. அதாவது, அதிக முறை 100+ பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற சாதனை பட்டியலில் கில் - சுதர்சன் (6 முறை) இணை 3வது இடத்திற்கு வந்துள்ளது.

இந்தப்பட்டியலில் விராட் கோலி - டி வில்லியர்ஸ் ஜோடி (10 முறை) முதல் இடத்தில் உள்ளது. மேலும், அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் கில் - சுதர்சன் (6 முறை) ஜோடி படைத்துள்ளது. இந்தப்பட்டியலில், கே.எல். ராகுல் - மயங்க் அகர்வால், கவுதம் கம்பீர் - ராபின் உத்தப்பா தலா 5 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை ஆகும்.

அதிக முறை 100+ பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகள்:

விராட் கோலி - டி வில்லியர்ஸ்: 10 முறை

கிறிஸ் கெயில் - விராட் கோலி: 9 முறை

ஷிகர் தவான் - டேவிட் வார்னர்: 6 முறை

டு பிளெஸ்சிஸ் - விராட் கோலி: 6 முறை

சாய் சுதர்சன் - சுப்மன் கில்: 6 முறை

அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி:

சாய் சுதர்சன் - சுப்மன் கில்: 6 முறை

கே.எல். ராகுல் - மயங்க் அகர்வால்: 5 முறை

கவுதம் கம்பீர் - ராபின் உத்தப்பா: 5 முறை

1 More update

Next Story