ஐ.பி.எல்.: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக சஞ்சு சாம்சன் முடிவு..? ரசிகர்கள் ஷாக்


ஐ.பி.எல்.: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து விலக சஞ்சு சாம்சன் முடிவு..? ரசிகர்கள் ஷாக்
x

image courtesy:PTI

சாம்சனை தக்க வைக்க ராஜஸ்தான் அணி நிர்வாகம் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது.

மும்பை,

அண்மையில் முடிவடைந்த 18-வது ஐ.பி.எல். சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசன் முடிவடைந்த சில தினங்களிலேயே அடுத்த சீசனுக்கான பேச்சுகள் எழ ஆரம்பித்து விட்டன. அதில் குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9-வது இடம் பிடித்து வெளியேறியது. இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளை காயம் காரணமாக சஞ்சு சாம்சன் தவறவிட்டார். சாம்சன் இல்லாத சமயத்தில் ரியான் பராக் அணியை வழிநடத்தினார்.

முன்னதாக இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. அத்துடன் தலைமை பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட் - சஞ்சு சாம்சன் இடையேயும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

இதனால் அவர் அடுத்த சீசனுக்கு (2026) முன்னதாக ராஜஸ்தான் அணியிலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. அதன்படி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான், சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் முறையில் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிரடி ஆல் ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை கேட்பதாக தகவல் வெளியாகியது. அத்துடன் இந்த தகவல்களுக்கு வலு சேர்க்கும் விதமாக சிஎஸ்கே மூத்த அதிகாரி ஒருவர் சஞ்சு சாம்சனை நாங்கள் வாங்க பார்ப்பது உண்மைதான் என்று கூறினார்.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான (2026) மினி ஏலத்திற்கு முன்பு தன்னை டிரேடிங் முறையில் மாற்றவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாம்சனின் குடும்ப உறுப்பினர்கள், அவர் இனி ராயல்ஸ் அணியில் தொடர விரும்பவில்லை என்று வெளிப்படையாகக் கூறுகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இருப்பினும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அவரை தக்க வைக்க ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இது குறித்து அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு சாம்சன் உடன்பட்டு தான் ஆக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story