விரைவில் தொடங்கும் ஐ.பி.எல்.: அணி நிர்வாகங்களுக்கு பறந்த உத்தரவு


விரைவில் தொடங்கும் ஐ.பி.எல்.: அணி நிர்வாகங்களுக்கு பறந்த உத்தரவு
x

இந்தியா - பாகிஸ்தான் போர்ப்பதற்றம் காரணமாக ஐ.பி.எல். தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்ற 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வந்தது. இதற்கிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் கொடுத்த பதிலடியை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிர தாக்குதலில் ஈடுபட்டதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது.

இதனால் ஐ.பி.எல். போட்டியை தொடர்ந்து நடத்தலாமா? வேண்டாமா? என்பது குறித்து அவசரமாக ஆலோசனை நடத்திய இந்திய கிரிக்கெட் வாரியம், ஐ.பி.எல். போட்டி தொடர் ஒருவாரம் நிறுத்தி வைக்கப்படுவதாக நேற்று முன்தினம் அறிவித்தது.

மேலும் புதிய அட்டவணை குறித்த விவரங்கள் சூழ்நிலையை கவனமாக ஆராய்ந்த பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்து ஆலோசித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தது.

இதனையடுத்து 10 அணிகளில் அங்கம் வகிக்கும் இந்திய வீரர்கள் தங்களது வீடுகளுக்கு உடனடியாக திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் தங்கள் நாட்டுக்கு விமானம் மூலம் கிளம்பினர். ஒரு சிலரை தவிர எல்லோரும் தாயகம் திரும்பி விட்டனர்.

இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்து வந்த தாக்குதல் நேற்று மாலை 5 மணியளவில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மீண்டும் விரைவில் தொடங்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பிய வீரர்களை ஒரிரு நாட்களுக்குள் மீண்டும் ஒன்றிணைக்குமாறு அணி நிர்வாகங்களுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 More update

Next Story